மதுபானம் அனுமதி இல்லை! அமைச்சர் திட்ட வட்டம்.
தமிழகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக இன்று காலையில் தகவல் வெளியானது, அதில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவாட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுபானக் கூடத்தில் மட்டுமே இதுநாள் வரை மதுபானங்கள் அருந்த அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக மது மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காலையில் உள்துறை செயலாளர் மூலம் அனுமதி வழங்கிவிட்டு, தமிழக பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தவுடன், அவசர அவசரமாக இந்த அரசாணையில் ஏன் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.