உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் வேற்று கிரகவாசிகள் தான் என டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவரான எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை, எகிப்து அரசின் சர்வதேச ஒத்துழைப்பு துறை அமைச்சர் இதனை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த சூழ்ச்சி கருத்து தவறானது என்பதற்கு பிரமிடுகளில் உள்ள கல்லறைகளே சாட்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எகிப்தில் பிரமிடுகள் மனிதர்களாலேயே கட்டுமானம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் 1990 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளே உறுதியான சாட்சியாகவும் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிரமிடுகளை கட்டியது நிச்சயமாக வேற்றுகிரகவாசிகள் தான்” என்று பதிவிட்டதற்கு பதிலாக எகிப்தின் சர்வதேச முதலீடு மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் ராணியா அல்-மஷாட் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உங்களை பின் தொடர்ந்து வருகிறேன், உங்களின் செயல்பாடுகள் பாராட்டுவதாகவும் உள்ளன. நீங்கள் பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றிய ஆய்வுகளை அறிவதற்கும், பிரமிடுகளில் உள்ள கல்லறைகளைப் பார்வையிடவும், நான் உங்களுக்கும் உங்கள் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிற்கும் அழைப்பு விடுக்கிறேன், நீங்கள் வருவீர்கள் என காத்திருக்கிறோம்’ என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அரபு மொழியில், சமூக ஊடகத்தின் வாயிலாக பதிலளித்த எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ், எலோன் மஸ்கின் இந்தக் கூற்று ஒரு பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரமிடுகளை கட்டியது எகிப்தியர்கள் தான், என்று அவர் கூறியதாக எகிப்து டுடே நாளிதழில் வெளியாகியுள்ளது.