கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

0
233

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆகிய கோயில்களில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இறைவனின் அருளைப் பெற பல மைல் தொலைவிலிருந்து திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத்தின் நோக்கமாகும். இதன்படி தமிழ்நாட்டில் 754 கோயில்களில் மதிய உணவு அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதனை மேலும் விரிவுபடுத்தும் விதமாக சென்ற ஆண்டு 16.09.2021 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் விரிவுபடுத்தப்பட்டது.

இதனை அடுத்து 2022-2023ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் முழு நேர அன்னதானத் திட்டம் தற்போது ஐந்து கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது மேலும் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே இந்த மூன்று கோயில்களிலும் முழு நேர அன்னதான திட்டத்தை முதல்வர் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் நடைபெறும். இதனால் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயனடைவார்கள்.

மேலும் திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் தரம் மற்றும் சுகாதாரத்துடன் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில் உள்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வே. இறையன்பு இ.ஆ.ப, உள்பட பல அமைச்சர்கள் உயர் அலுவலக அதிகாரிகள் தலைமைச் செயலகத்திலிருந்து கலந்து கொண்டனர்.

Previous articleவந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!
Next articleதங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!