அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!!
இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என்றழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி 19 அடி சிலை திறக்கப்படவுள்ளது.இச்சிலைக்கு சமத்துவத்தின் சிலை(statue of equality) என பெயரிடப்பட்டுள்ளது. இச்சிலையானது அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சார்பில்(ஏஐசி) நிறுவப்படவுள்ளது.
இந்த அம்பேத்கார் சிலையானது மேரிலாந்து அக்கோவிக் நகரில் வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் 13 ஏக்கர் நிலப்பரப்பளவில் நிறுவப்படவுள்ளது.இவர் 1891 ஏப்ரல் 14ஆம் தேதி ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார்.இருப்பினும் சமுதாய ஏற்ற தாழ்வுகளை தாண்டி கல்வி ஒன்றையே மூலதனமாக கொண்டு முன்னேறியவர்.
இவர் இந்திய அரசியலமைப்பு சபை வரைவு குழுவின் தலைவராக பதவிவகித்தவராவார்.சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றிருந்தார்.தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தீண்ட தகாதவர்களாக கருதப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடிய சமூக போராளியாவார்.
சட்டமேதை அம்பேத்கர் எனவும் இவரை போற்றுவர்.அம்பேத்கர் டிசம்பர் 6 ,1956 அன்று இயற்கை எய்தும் முன் புத்த மதத்தை தழுவினார். அக்டோபர் 14ஆம் தேதி தம்ம சக்க பரிவர்த்தன தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதன் நினைவாக அக்டோபர் 14ஆம் நாளில் மேரிலாந்தில் இவரது சிலை திறக்கப்படவுள்ளது