20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு – என்.ஆர்.சி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு அறிக்கை.

0
148

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது.

ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை. கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

 ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (என்ஆர்சி) இணைந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம்,’ என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் தன்னாட்சி ஆய்வு அமைப்பான சிஆர்எஸ், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவை எம்பி.க்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யும். இந்த அமைப்பு, இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆய்வு நடத்தி கடந்த 18ம் தேதியிடப்பட்ட அறிக்கையை சமர்பித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடிமக்களாக மாறுவதை தடை செய்கிறது. அதன் பின் இச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், எந்த ஒரு மத அம்சமும் சேர்க்கப்படவில்லை.ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் நடுநிலை செயல்பாட்டில் மத அடிப்படையிலான அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, அதனுடன் இணைந்த குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றால் இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம். பாஜ மற்றும் பிரதமர் மோடியின் இந்துத்துவா கொள்கையாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டாலும் இந்தியாவின் மதச்சார்பற்ற அந்தஸ்துக்கு அச்சுறுத்தலும், சர்வதேச மனித உரிமை மீறல்களும் நடக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தில், இலங்கையில் பாதிக்கப்படும் இந்துக்களான தமிழர்கள்,  மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை தருவதில் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக விளக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous articleபல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா
Next articleஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் ; மேஜா் ஜெனரல் விபின் ராவத்திற்கு வைகோ கண்டனம் !!!