பாரதீய ஜனதா கட்சியின் மூளையாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்துபவர் இவர்தான். அதனால்தான் அனைவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா கருதுகிறார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை ஒருங்கிணைத்து அதிமுகவை வலுவாக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷா கருதுகிறார். ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசினார். அதன்பின் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்தியும் வெளியானது.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேட்டி அண்ணாமலை கொடுத்தார். எனவே, அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்றிவிட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒருபக்கம், தமிழக பாஜக தலைவரை நியமிக்க டெல்லியிலிருந்து கிஷன் ரெட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையே நீடிப்பார் என செய்திகள் வெளிவந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள். இந்நிலையில்தான் வருகிற 10ம் தேதி சென்னை வரும் அமிஷ்தா 11ம் தேதி அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சில பாஜகவினரை நேரில் அழைத்து பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் பதவி பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அவர் ஆலோசனை செய்யவிருக்கிறார்.

நேற்று சென்னை வந்த நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் சீமான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அடுத்து அமித்ஷா வரவிருக்கிறார். திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு எதிரான கட்சிகளை அமித்ஷா ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை கண்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.