எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.
மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார். அதாவது, அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் எனவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதன் அர்த்தம் பாஜகவுடன் கூட்டணி போடும் மற்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கும். அதோடு, ஆட்சி அமைப்பது பற்றி தேர்தல் முடிவுக்கு பின் ஆலோசிக்கப்படும் எனவும் கவனமாக சொல்லி இருக்கிறார். இதன் அர்த்தம் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. இணைந்துதான் ஆட்சி அமைக்கப் போகிறோம்.. கூட்டணி ஆட்சிதான் அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் பழனிச்சாமி விருப்பப்பட்டு பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை. ஏனெனில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அவர் 2 வருடங்களுக்கு முன்பே அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதற்கு அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே சொன்னார். இப்போது, பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அதிமுக – பாஜக கூட்டணி நிகழ்ந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதேநேரம், எப்படி பார்த்தாலும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கே அதிக சீட்கள் ஒதுக்கப்படும். என்.டி.ஏ கூட்டணியை விட அதிமுக அதிக இடங்களில் ஜெயிக்க வாய்ப்புண்டு. எனவே, முதல்வராகவும் வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கே அதிகம் எனவும் சிலர் சொல்கிறார்கள்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கமெண்ட்டில் சொல்லுங்கள்!…