முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அவர் பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தார். மத்தியில் பாஜக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உருவானது.
ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.
மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என சொன்ன பழனிச்சாமி இப்போது தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையை காட்டி மிரட்டியே அதிமுகவை அமித்ஷா அடிபணிய வைத்திருக்கிறார் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த வருடம் மதுரையில் பாஜக சார்பில் ரத யாத்திரை நடந்தபோது ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்த அமித்ஷா ‘அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இரண்டு கட்சிகளும் சேர்ந்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டன. எனவே, மக்கள் பாஜகவை ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள்’ என சொல்லியிருந்தார். அந்த வீடியோவை இப்போது இணையத்தில் பகிர்ந்து ‘கூட்டணி இல்லாதபோது அதிமுகவை ஊழல் கட்சி என சொன்னவர் இப்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி வைத்திருக்கிறார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.