இதுவரையில் அமைதியாக இருந்து வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டி இருக்கின்றார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை அடைந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்தடைந்தார்.
அவருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதோடு சசிகலா சென்ற இரு வார காலமாக எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் மௌனமாகவே இருந்து வருகின்றார். இருந்தாலும் தினகரன் விவேக் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டுமே பல முக்கியமான விஷயங்கள் தொடர்பாக விவாதம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்ற விஷயம், சசிகலா அதிமுகவில் இணைத்துக் கொள்ள இயலாது என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பது, போன்ற விஷயங்கள் சசிகலாவையும் தினகரனின் யோசிக்க வைத்திருக்கிறது. ஆகவே சசிகலா தினகரன் இடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தெரிவித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நாளை மறுநாள் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் வருவதை முன்னிட்டு அந்தப் பிறந்த நாளை கொண்டாடி விட்டு அதற்கு மறுதினம் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட இருக்கின்றார் டிடிவி தினகரன். ஜூம் மீட்டிங் மூலம் நடக்க இருக்கும் இந்த பொதுக்குழுவில் 10 மாவட்டத்திற்கு ஒரு சந்திப்பு என்று 10 திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த பொதுக் குழுவில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் மற்றும் சசிகலாவிற்கு முக்கிய பொறுப்பு அளிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கிறார்கள் அமமுக வட்டாரங்களில்.