வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை
தமிழக உள்ளாட்சி தேர்தலில் நேரடி தேர்தல் இல்லாத பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக பொதுக் குழு முடிந்த பிறகு நவ.,25 முதல் 29 வரை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து தாங்கள் செலுத்திய கட்டண ரசிதை காட்டி, கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 22.11.2019 ஆம் தேதி காலை 10மணி முதல் மாலை 5மணி வரை விருப்பமனுவை மாவட்ட தலைநகர அலுவலகங்களில் அளிக்கலாம் என்றும் தெவித்துள்ளது.
மேயர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை ஆளுங்கட்சியான அதிமுக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.