உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!
ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்துதால் மேல் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி இரண்டாம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. ஆனால் அந்த குழந்தை நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தது. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் விரைந்து பெற்றோருடைய அனுமதி பெற்று குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டது.
அந்த ஒன்றரை வயது குழந்தையின் கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண் குழந்தைக்கும் பொருத்தப்பட்டது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டது.
இதுவரை மிகக் குறைந்த வயது உறுப்பு தானம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.ஆனால் தற்போது 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் மிக குறைந்த வயது உறுப்புக் கொடையாளர் பட்டியலில் ஆந்திர மாநிலக் குழந்தையை முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.