கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!!
கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் எதிரொலியாக தென்காசியில் எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் வழக்கமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்லும் நிலையில் மக்கள் வெப்பத்தை தணிக்க பழங்களையும் குளிர்பானங்களையும் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதையடுத்து சர்பத், ஜூஸ் போன்று தயாரிக்கப் பயன்படும் எலுமிச்சையானது தென்காசி மாவட்டஙனத்தில் அதிகம் விளைகின்றது. தற்பொழுது தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பது போன்றே தென்காசியில் எலுமிச்சையின் விலையும் அதிகரித்து வருகின்றது.
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரத்தில் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தை உள்ளது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், வள்ளியம்மாள்புரம், ஆவுடையானூர், புலவனூர், சேர்வைகாரன்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை சாகுபடி செய்து எலுமிச்சை பழங்களை விற்பனை செய்ய பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ எலுமிச்சை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(ஏப்ரல்27) ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எலுமிச்சையின் திடீர் விலையேற்றத்திற்கு காரணம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சையின் தேவை அதிகரித்து உள்ளது. மேலும் எலுமிச்சையை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகளுக்கும் கேரளா வியாபரிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் எலுமிச்சையை ஏலத்தில் எடுக்க பலரும் போட்டியிட்டனர். உள்ளூர் வியாபாரிகளைவிட வெளியூர் வியாபரிகளே எலுமிச்சையை ஏலத்தில் எடுக்க குவிந்தனர். வெயிலின் தாக்கம் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ அதே அளவுக்கு எலுமிச்சை பழங்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்லும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.