காஞ்சிபுரம் பக்தர்கள் சார்பில் பருவதமலை அடிவாரத்தில் வைக்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவ லிங்கம் சிலை. சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கடலாடி,தென் மகாதேவ மங்கலம், ஆகிய இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 5500 ஏக்கர் பரப்பளவில் பருவதமலை உள்ளது.
பருவத மலையின் உச்சியில் ஸ்ரீ மல்லிகார்ஜூனர் உடனுறை பிரமராம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள்ள சிவனை தரிசிப்பதற்கும் கிரிவலம் வருவதற்கும் ஏராளமான பக்தர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் பருவதமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று வருகின்றனர்.
பருவத மலைக்குச் செல்லும் காஞ்சிபுரம் பக்தர்கள் ஒன்றிணைந்து பருவதமலை கோடி ருத்ராட்ச தியான டிரஸ்ட் மூலம் பருவத மலையின் அடிவாரத்தில் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்க கடந்த 10 நாட்களாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் ருத்ராட்சைகளால் உருவான சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளம் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா எடுத்துச் சென்றனர். வீதி உலா வந்த ருத்ராட்ச லிங்கத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
பின்னர் பருவதமலைக்குச் செல்லும் வழிநெடிகிலும் உள்ள பகுதிகளில், பக்தர்கள் தரிசித்து வணங்கும் வகையில் ருத்ராட்ச சிவலிங்கம் கொண்டு செல்லப்பட்டு பர்வதமலை கோவில் நிர்வாகத்திடம் வழங்க கொண்டு செல்லப்பட்டது.