அண்ணாமலை பதவிக்கு ஆப்பு வைத்த உட்கட்சி விவகாரம்!

Photo of author

By Anand

அண்ணாமலை பதவிக்கு ஆப்பு வைத்த உட்கட்சி விவகாரம்!

Anand

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கியமான விவகாரமாக அண்ணாமலையின் பாஜக மாநில தலைவர் பதவி மாற்றம் இன்று கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. 2023-ல் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்ததற்கான முக்கிய காரணமாக இருந்த அண்ணாமலை மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகும் நிலையில் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறார்.

1. ஒருங்கிணைந்த அதிமுக – பாஜக மீண்டும் அணி திரளுமா?

தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் இணைக்க தமிழக பாஜகவினர் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாகவே அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு அமைந்துள்ளது. இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை தலைமையில் கூட்டணி எப்படியும் சாத்தியமில்லை என உறுதியாக தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக, அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்டித்ததோடு, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஆனால் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்ற அதிமுகவினர் வைத்த கோரிக்கை காரணமல்ல என்றும் இதற்கு பின்னால் வேறு சில விவகாரங்களும் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

2. அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜகவினர் புகார்

அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜகவினரே தேசிய தலைமைக்கு புகார் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேசவ விநாயகம், அண்ணாமலை கட்சி நிதியில் மோசடி செய்ததாக (corruption) புகார் பதிவு செய்துள்ளார். இதன் பின்னணியில், அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்பாக பல கோப்புகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் பாஜக தலைமைக்கு நேரடியாக அண்ணாமலை தேர்தல் பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாகவும் (complaint) புகார் அளித்துள்ளார். மேலும், அண்ணாமலை மற்றும் அவரது அணியினர், திமுக அமைச்சர்களை மிரட்டி “collection” செய்ததாகவும், இதில் கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனைகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

3. அண்ணாமலைக்கு எதிராக பாஜகவின் மூத்த தலைவர்கள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜகவின் முக்கிய ஆலோசகராக இருக்கும் கேடி ராகவன், தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணாமலை மீது புகார்கள் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த “அன்னபூர்ணா விவகாரம்” தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அண்ணாமலை நடவடிக்கை எடுக்க முயன்றது அவரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக, அண்ணாமலை பாஜகவின் முக்கிய தலைவர்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த மக்களவை தேர்தலின் போதும் சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அண்ணாமலையின் எதிர்காலம்?

இதனால், அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி நீடிக்குமா? அல்லது அவரை மாற்றி தமிழக பாஜகவில் புதிய தலைமை உருவாகுமா? என்பதே தற்போதைய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த வகையில் மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது என்றும், ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.