அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர்

0
370
Anbumani Ramadoss
Anbumani Ramadoss

அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர்

இன்று பாமகவின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இதனையடுத்து அவரது பிறந்தநாளை பல்வேறு வழிகளில் பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.

பாமக நிறுவனரான  மருத்துவர் இராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக இவர் 1968 ஆம் அக்டோபர் 9 ஆம் நாளில் பிறந்தார். ஆரம்பத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். அதன் பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பாமக அங்கம் வகித்த போது அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை உலக அளவில் பெருமை கொள்ளும் வகையில் சுகாதாரத்துறையை மேம்படுத்தி காட்டினார். இதற்காக உலக அளவில் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது பெரும் நிறுவனங்களையும் எதிர்த்து புகையிலை தடை சட்டத்தை கொண்டு வந்தது இன்றும் பெருமையாக பேசப்படுகிறது. அதே போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கனவான கிராம புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில் இவர் கொண்டு வந்த தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உலக அளவில் சிறப்பு பெற்றுள்ளது.குறிப்பாக இவருடைய இந்த சிறப்பான செயல்பாட்டிற்காக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் பாராட்டை பெற்றுள்ளார்.

இவர் அமல்படுத்திய சட்டங்களால் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் குறித்த விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது உள்ளிட்டவைகளுக்கு தடை கொண்டு வரப்பட்டது. மேலும் இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். தேசிய கிராமப்புற சுகாதார திட்டம்,108 இலவச ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளால் இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி பெற்ற விருதுகள்:

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership).

உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award).

சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.

இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவருக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தருமபுரி மக்களவைத் தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றபின் தருமபுரி தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வேளாண் பிரச்சனை மற்றும் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தை நடத்தியுள்ளார்.குறிப்பாக மொரப்பூர் தருமபுரி இடையேயான ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். அடுத்து காவிரி டெல்டா பகுதியை பாதுகக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி அதிலேயும் அவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக அரசியலில் அதுவரை யாரும் செய்யாத பல்வேறு விதமான பிரச்சார யுக்திகளை கையாண்டார். குறிப்பாக சென்னை அருகேயுள்ள வண்டலூரில் இவர் நடத்திய ஹை டெக் பிரச்சாரம் தமிழக மக்களை மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த தேர்தலில் தனித்து பாமக 23,00,775 வாக்குகள் பெற்று, 5.3 % வாக்கு சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்து தமிழகத்தின் முன்றாவது கட்சியாக ஆனது.

இதனையடுத்து கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இணைந்து அக்கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பாமகவினர் பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர். இதற்காக இவரது சாதனைகளை சமூக ஊடகங்களில் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக அரசியலில் சூப்பர் ஸ்டார் இவர் தான் என்பதை உணர்த்தும் வகையில் #HBDPoliticalSuperstar என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து பாமகவினர் பதிவிட்டுள்ள ட்விட்கள் சில:

 

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 964 பேர் உயிரிழப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!
Next articleசென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!