ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?
தமிழக அரசியலில் கட்சிகளில் பாமகவுக்கு என எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவர். அந்த வகையில் பாமகவுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இருக்கும். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை சிறப்பாக நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் பாமகவின் உட்கட்சி விவகாரங்களில் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. அது சமீபத்திய நிகழ்வுகளில் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. இது அப்பா மகன் பிரச்சனையாகவே வெளியில் தெரிந்தாலும் இதற்கு பின்புலத்தில் ஜி.கே மணி இருப்பதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாமக உட்கட்சி பிரச்சனை சில மாதங்களாக தான் வெளியில் தெரிய வந்துள்ளது என பலர் நினைப்பர் ஆனால் இவை கடந்த 3 ஆண்டுகளாகவே பாமகவில் நீடித்து வருகிறது என்று கட்சியினர் சிலர் கூறுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களை சொன்னாலும், ஜி.கே மணியை வெளிப்படையாக விமர்சிக்க அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு இப்போது தான் சரியான நேரம் அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் கருணாநிதி அவர்கள் பெயரில் பல்கலை கழகம் வேண்டும் என்று அவர் பேசியதே இதற்கு ஆரம்ப புள்ளியை வைத்துள்ளது.
இதில் ஆரம்பித்த அன்புமணி கோஷ்டி தேர்தலில் ஜி கே மணி சரியாக செயல்படவில்லை, தருமபுரியில் சௌமியா அன்புமணி சிறு வித்தியாசத்தில் தோற்றது இவரால் தான். அவர் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என வித விதமாக காரணங்களை அடுக்கி வருகின்றனர்.
ஆனால் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளதாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. அதாவது வழக்கமாக கட்சி தலைவர் பதவி தான் அதிகாரம் மிக்கதாக இருந்தாலும் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களிடமே அனைத்து அதிகாரங்களும் இருந்து வந்தன. ஜி.கே மணி தலைவராக இருந்த வரை அவர் பெயரளவில் மட்டுமே தலைவராக இருந்தார். பெரும்பாலான முடிவுகளை நிறுவனர் மட்டுமே எடுத்து வந்தார்.
இந்நிலையில் ஜி கே மணி வகித்து வந்த தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்த பின்னர் அந்த பதவிக்கான உண்மையான அதிகாரத்தை பெற அவர் எதிர் பார்த்துள்ளார். ஆனால் சாதாரண நிர்வாகிகள் நியமனம் முதல் கூட்டணி விவகாரம் வரை அனைத்திலும் மீண்டும் நிறுவனரான ராமதாஸ் கையே ஓங்கியுள்ளது. அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்த ஜி கே மணி செயல்பட்டு வருகிறார். இது அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே போல தான் தலைவர் பதவியை அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தது போல தன்னுடைய மகன் தமிழ் குமரனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ஜி.கே மணி கேட்டு வாங்கினார். ஆனால் அப்போதும் அன்புமணி கோஷ்டியினர் இந்த பதவியை எப்படி அவருக்கு தரலாம் என எதிர்ப்பு தெரிவித்து அப்பதவியிலிருந்து விலக வைத்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் மீது ஜி.கே மணிக்கு கோபம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதை அப்போது நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில் அவர் வெளிப்படுத்தினர். அன்புமணி பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தான் சட்டசபைக்கு செல்ல வேண்டும் சீக்கிரம் முடியுங்கள் என ஜி கே மணி கூற இதை விட சட்டசபை முக்கியமாக என அன்புமணி காட்டமாக கூற அப்போதும் இருவருக்கும் இடையேயான முரண்பாடு வெளிப்பட்டது.
இந்நிலையில் தனக்கு ஆதரவான ஒருவரை இளைஞர் அணி தலைவர் பதவிக்கு கொண்டு வர அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டார்.ஆனால் ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமன் அவர்களை அப்பதவிக்கு நியமித்தது அன்புமணி தரப்பை மேலும் கோபமடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவருக்கு பின்புலமாக ஜி கே மணி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அன்புமணி கோஷ்டி வைத்துள்ளது. இந்நேரத்தில் அவர் கருணாநிதி பெயரில் பல்கலை கழகம் கேட்க அது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொருவரும் கட்சியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் வெறுப்பை காட்டி இப்படி விமர்சித்து கொள்வது எங்கே போய் முடியுமோ என அடிமட்ட பாட்டாளிகள் புலம்பி வருகின்றனர்.