இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் தொழில்நுட்பகோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எழுத முடியாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆன்லைனில் மறுதேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.