கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. ஆனால் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் தேர்வு பற்றி எந்த முடிவுகளும் கல்லூரிகளால் அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் எதுவும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் வகுப்புகள் வரும் 12 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த செமஸ்டர் ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் உண்டு என்று தெரிவித்துள்ளது.
இது தவிர செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.