கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார்.
அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஒருபக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக தலைவர்கள் பற்றி தவறாக பேசவே அதையே காரணம் காட்டி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக.

ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எப்படியெனில், நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியிருந்தார். கண்டிப்பாக திமுகவை தோற்கடிக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என அவர்கள் பேசியிருப்பார்கள் என்றே கருதப்படுகிறது.
இந்நிலையில்தான், 2 வருடங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பின் அண்ணாமலை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. 2019 தேர்தலில் மோடி வாரணாசியில் போட்டியிட்ட போது ‘ வேட்புமனு தாக்கல் செய்ய மோடி செல்கிறார். கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நீங்கள் வாருங்கள்’ என நான் பழனிச்சாமியை அழைத்தபோது ‘தோல்வி அடையப்போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?’ என கேட்டார் பழனிச்சாமி. மற்றவர்களின் காலை பிடித்து, மக்களால் தேந்தெடுக்கப்பட்டாத எம்.எல்.ஏக்களுக்கு காசு கொடுத்து முதல்வர் ஆன பழனிச்சாமி என் தலைவனை பேசியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, கூட்டணி கட்சி தலைவராக ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்’ என பேசியிருக்கிறார்.
தற்போது அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணையும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.