சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களில் அதிகம் பேசப்படும் நபர் அண்ணாமலை. இவர் பத்து ஆண்டுகள் காவல்துறையில் ஐபிஎஸ் ஆகவும் பணிபுரிந்தவர். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கரூரில் தற்சார்பு விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயம் சார்ந்து விவசாயத்தையே நம்பி இல்லாமல், பொருளாதாரத்தை பல வழிகளில் மேம்படுத்தவும் இருப்பதாக கூறிவருகிறார்.
சரி, இவரின் நோக்கம் தான் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
விவசாயம் சார்ந்து,
இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாகவும், மேலும் விவசாயிகளின் பொருளாதாரத்தை இன்னும் 20 சதவிகிதம் வரை உயர்த்துவதாகவும் என தனது திட்டங்களை வகுக்கிறார்.
அதேநேரம் இவர் வலதுசாரிகளின் மறைமுகமாகவும், சங்பரிவார் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வழிகாட்டலின் படியே இவர் செயல்படுகிறார் என்றும் சமூக வலைத் தளங்களில் பலர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
அதேவேளையில், வலதுசாரி சிந்தனையாளர்கள் இவரின் செயல்பாடுகளை பாராட்டுகின்றனர்.
அதைப்போல் மோடியை பிடிக்கும் என்கிறார்.
அரசியலில் நிலைப்பாடு
இவர் ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அது பரவலாக பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் சாரம்சம் “மோடியை ஏன் பிடிக்கும் என்பதுதான்”. அதுதான் இவரை வலதுசாரி சிந்தனையாளராக பார்க்கப் படுவதற்கு காரணமாகும்.
மேலும் இவர் பிரதமர் அலுவலகத்தில் முன்பெல்லாம் ஊழல் இருந்ததாகவும் தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு அப்படியெல்லாம் இல்லை எனவும் அந்த நிகழ்ச்சியின் பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசு திட்டங்களான “ஜிஎஸ்டி” மற்றும் “பணமதிப்பிழப்பு” போன்ற திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையை கொண்டவையாகவும் இருப்பதாக அதனை பாராட்டியுள்ளார்.
ஆகவேதான், அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில், “அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இவர் பாஜகவால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்” என்றும் கூறுகிறார்கள்.
மேலும் இவரின் பேச்சுக்கள் அனைத்தும் வலதுசாரி சிந்தனையாளர் ஆகவே உள்ளது. இதுவரை வலதுசாரிகள் என்னென்ன பேசினார்களோ அதையேதான் அவர் திரும்பவும் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சமூகநீதி அரசியல் செயல்பாட்டாளர்கள் கூறிவருகிறார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்கள் இவரை கேட்டபோது அவர் கூறிய பதிலாவது,
“அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நான் என் கருத்துக்கு எதிராக பார்த்ததில்லை, அவர்கள் மக்களுக்கான பொது பணியை அரசியலின் மூலமாக செய்கிறார்கள். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆகவே அவர்களுக்கு அதிகமான பொறுப்புகள் உண்டு என்பதுதான். நாம் ஏன் அரசியலை எதிர்த்துப் பேசுகிறோம் என்றால் அவர்கள் ஒரு போதும் சிறந்தவராக இருக்கமாட்டார் என நினைப்பதால் தான் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் அனைத்து வழிகளில் ஆய்வு செய்து முடிவெடுப்பேன் என்று கூறியிருந்தார்.
சமூக ஊடங்களில் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி
பெரும்பான்மையான சமூகம் என்பது சமூக ஊடகங்களுக்கு வெளியே தான் உள்ளது. நான் அந்த பெரும்பான்மையான சமூகம் உங்களுக்காக வேலை செய்ய விரும்புகிறேன். மேலும் மதம் என்பது தனிப்பட்ட விஷயம் ஆகும் இதனை காரணம் காட்டி என்னை சமூக வலைத்தளங்களில் முடக்க நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் முடங்கும் ஆள் இல்லை என்கிறார்.
“எனக்கு எது சரி என்று படுகிறதோ அதில்தான் செல்வேன், அது வலதோ, இடதோ எதுவாக இருந்தாலும் எனக்கு சரி என்று படுகிற படிதான் செல்வேன். நான் விவசாயத்தில் இருக்கிறேன் ஆனால் இது என் முழு நேர வேலை அல்ல. விவசாயத்தின் ஊடாக நான் சில மாற்றங்களை சமூகத்திற்கு ஏற்படுத்த இருக்கிறேன்”.
ரஜினியின் முதல்வர் வேட்பாளராக ஆவதற்கு இப்போது எனக்கு தகுதி இல்லை. நான் எப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். ரஜினி எனக்கு நடிப்பின்பால் தான் ரசிகன். அவர் கட்சி தொடங்க வேண்டும் கொள்கை செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு பிடித்தால், அவர்கள் அவரோடு செல்வதில் தவறு ஒன்றுமில்லை”.
“என்னை ஒரு அமைப்பின்பால் உள்ளவன் என்று முத்திரை குத்தி முடக்க நினைக்கிறார்கள். ஆனால் நான் முடங்கும் ஆள் இல்லை, மேலும் நான் எல்லாவற்றிற்கும் அமைதியாக இருக்க மாட்டேன்” என்றும் அண்ணாமலை கூறுகிறார்.