தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.
எனவே, அண்ணாமலை மீது திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே கோபம் ஏற்பட்டது. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.
எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில், இதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன் நான்.
இதைவிட 10 மடங்கு அதிக பவர் என்னிடம் இருந்தது. நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நேற்று கூட என் தோட்டத்துக்கு போனேன். எனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறேன். ஆடு மாடுகளை பார்த்தேன். எனக்கென ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அரசியல் நான் சொன்ன கருத்துக்களை மாற்றி பேசமாட்டேன். என்னுடைய தனி உலகத்தில் நான் அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். மோடிக்காக அரசியல் செய்ய வந்தேன். அட்ஜஸ்மெண்ட் பாலிக்டிக்ஸ் என்னிடம் கிடையாது’ என பேசியிருக்கிறார்.