அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? – எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

Photo of author

By Anand

அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? – எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

Anand

அண்ணாமலை பதவியில் இருந்து மாற்றப்படுவரா? அதற்கு காரணம் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைப்பது என பல விதங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை நீக்கினால் பாஜக தமிழகத்தில் வளர முடியாது இந்த வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு அதிகம் என மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையான நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கைகள் கடந்த சில வாரங்களாக வேகமெடுத்து வருகின்றன. இதற்கான காரணங்கள், எதிர்பார்ப்புகள், மற்றும் பின்விளைவுகள் குறித்து பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக தலைமை, “ஒருவரின் பதவியேற்பு தேர்தல் நடைமுறையை ஒட்டி நடக்கும்” என்ற வழக்கமான நெறிமுறையை கடைப்பிடித்தாலும், கட்சியின் உயர்நிலைத் தலைமையின் முடிவுகள் மிக முக்கியமாக கருதப்படும் என்பது ஒரு யதார்த்தம்.

ஈ.பி.எஸ் – அமித் ஷா சந்திப்பு: மாற்றத்திற்கு தூண்டும் காரணமா?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-அதிமுக கூட்டணியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால், அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நேரடியாக அமித்ஷாவிடம் முன் வைத்ததாக கூறப்படுகிறது. இவரால் கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்களை காரணமாக காட்டி, அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் கூட்டணி சாத்தியமில்லை எனக் கூறியதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிகிறது.

அண்ணாமலை ஆதரவாளர்கள் களத்தில்

இந்நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் தலைவருக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் வீடியோக்கள், போஸ்டர்கள், மற்றும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அண்ணாமலை தன்னிலை உணர்ந்து, “தொண்டனாக பணியாற்ற தயார்” என தெரிவித்த பேட்டி மேலிடத்திட்டத்துக்கு அடிப்படை என்றே பார்க்கப்படுகிறது.

RSS-ன் மறைமுக தாக்கம்

இந்த நிலைமைக்கு பின்னால் தேசிய வியூக அமைப்பாளர்களான RSS மற்றும் பாஜகவின் வியூக வட்டாரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘எப்போது யாரை களமிறக்க வேண்டும், ஓரங்கட்ட வேண்டும்’ என்பதை டெல்லியில் உள்ள தலைமை நன்கு மதிப்பீடு செய்து செயல் படுகிறது. நாக்பூரில் உள்ள RSS தலைமையகமும் இதற்காக கூடுதல் கணக்குகள் போட்டு வருகின்றது.

அண்ணாமலை – எதிரொலி மற்றும் வாக்கு வங்கி விளக்கம்

அண்ணாமலை ஒருவேளை நேர்மையான தலைவர் என அறியப்பட்டாலும், சில நேரங்களில் அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானதாகும். அவர் தலைமை ஏற்ற பிறகு தமிழக பாஜகவில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரித்ததாக கூறப்படுகிறது. அதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் ஆதாரமாக கட்டப்படுகிறது. ஆனால் 2021 தேர்தல்களில் பாஜக தனித்து 11% வாக்குகளை பெற்றது என்றாலும், அது கூட்டணி வாக்குகளின் பெரும் பங்கு என்பதையும் மறந்துவிட முடியாது. அதனால் எல்லாத்தையும் கவனித்து தான் தேசிய தலைமை இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 தேர்தல் – புதிய தலைவர் வருகிறாரா?

இந்நிலையில் தலைமை மாற்றம் தொடர்பாக, நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்கலாம் என்ற தகவல்கள் வலுப்பெற்று வருகின்றன. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களில் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் பதவி மாற்றம் தமிழக பாஜகவுக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

பாஜக மாநிலத் தலைமை மாற்றம் என்பது வெறும் நபரின் மாற்றம் மட்டும் அல்ல; அது ஒரு கட்சியின் எதிர்கால தேர்தல் திட்டங்களுக்கும், கூட்டணிக் கட்டமைப்பிற்கும் வழக்கமாக செயல்படும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைமை மாற்றம் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.