முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குபதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக பிரச்சினை எழுந்தது.

இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து அவர், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார். அப்போது தி.மு.க-வை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அ.தி.மு.க.வினர் பிடித்து, அவரது சட்டையை கழற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அது தொடர்பான  வீடியோவை ஜெயக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க-வினர் தாக்கியதில் காயமடைந்த நரேஷ்குமார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நாற்பது பேர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 15 சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டையார்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து ஜெயக்குமாரை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து,  போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின், மார்ச் 7ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. அதில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.