ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ராமநாராயண் அரசு பொது மருத்துவமனையில், ஆக்சிஜன் இருந்தும், சரியான நேரத்தில் கிடைக்காததால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு காலியான உருளைகளை மாற்றுவதற்கு 5 நிமிடம் ஆனதால், ஆக்சிஜன் செல்வது குறைந்து கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தான் திருப்பதிக்கு ஆக்சிஜன் அனுப்ப படுகிறது. ஆக்சிஜன் வருவதற்கு சிறிது தாமதமானதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 25 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் கிடைக்கவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 11 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.