திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் பணம், தங்கம், இடம் என பெருவாரியாக நன்கொடை வழங்குவது வழக்கம். அப்படி தேவஸ்தானத்துக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துகளில், பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை மட்டுமே ஏலம் விடப்போவதாக, நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அப்போது வரை ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசாங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்கள் விற்பனை குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி பக்தர்களின் எதிர்ப்பலைகளை மனதில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சொத்துக்களை ஆலயங்களின் நிர்மாணத்திற்கும் தர்ம பிரச்சாரத்திற்கும் இதர மத காரியங்களுக்கும் உபயோகிக்கலாமா என்பதை தீர்மானிப்பதற்கு மத பெரியவர்களையும், இதுகுறித்து தீர்மானிக்கக்கூடிய அறிஞர்களையும் பக்தர்களின் குழுக்களையும் பிற பல்வேறு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வரும் வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 50 அசையா சொத்துக்களை விற்கும் எண்ணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அதற்கு தொடர்பான திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தேவையான செயல்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.