குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
குவைத்தில் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த ஆறு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பத்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள மூன்று பேர் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் காயமான பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இந்தியர்கள் அதிகம் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தை அந்நாட்டின் துணை பிரதமர் ஷேக் பகத் யூசுப் சவுத் அல் ஷபா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைப் பிரதமர் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களே இந்த தீ விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விதிகளை மீறுவதுதான் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மையான காரணம். மேலும் தற்போது விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளரான ஆப்ரகாம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.