45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்!
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் உள்துறை, வெளிதுறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது.
இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். அதே இடத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.
இந்த கோவிலில் 45 காலிப்பணியிடங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரிசையில் நின்று இந்த அலுவலகத்தில் திரும்பவும் அளித்து வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனுக்களை அளித்துள்ளனர். என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணி இடங்களுக்கு இவ்வளவு விண்ணப்பங்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர். ஏனென்றால் நம் நாட்டில் அந்த அளவுக்கு வேலை இல்லாத திண்டாட்டம் உள்ளது. பல பேர் அவர்களின் தகுதிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வேலையானாலும் பரவா இல்லை என செய்து வருகின்றனர்.