TVK: மாவட்ட செயலாளர்கள் நியமன ஆலோசனையில் விஜய் செயல்பாடு குறித்து வெளியான தகவல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியான வேலைகளில் அடுத்தடுத்து மும்மரம் காட்டி வருகிறார். அந்த வகையில் மாநாடு முடிந்த கையோடு பனையூரிலிருந்து மேலோட்டமாக கட்சி வேலைகளை பார்த்து வந்தார். இதனால் வொர்க் பிரம் ஹோம் விஜய் செய்கிறாரா என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து கட்சி ரீதியான ஈடுபாடுகளில் இவரின் பங்கானது அதிகமாக உள்ளது.
அந்த வரிசையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக நேரடியாகவே களத்திற்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்தார். பல நாட்களாவே தொடர்ந்து தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. சூட்டோடு சூடாக இதன் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்பட்டது. அந்த வகையில் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப் போவதாக விஜய் அறிவித்துள்ளார்.
மேற்கொண்டு இவர்களுக்கு என 15 பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்பொழுது 19 மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கு முன்பு அவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அப்பொழுது விஜய்யுடன் அந்த அறையிலிருந்த புஸ்ஸி ஆனந்தை வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இது தற்பொழுது கட்சிக்குள் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஒரு பக்கம், நிர்வாகிகளின் தனிப்பட்ட ஆலோசனையை தான் மட்டும் கேட்க வேண்டும் என நினைத்ததனால் விஜய் இந்த முடிவு எடுத்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.