தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றார். தனது தாய் தந்தையரிடம் ஆசி வாங்கி வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வாகனத்தில் வாக்கு சேகரித்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார்.
அவர் செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களிடம் நின்று பேசிவிட்டு சென்றார். இதுபோல பல இடங்களில் நடந்ததால் அவரால் 3 மணிக்குள் அலுவலகத்துக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றுவிட்டதால் அவரால் இன்று வேட்புமணுத் தாக்கல் செய்ய முடியவில்லை.
இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் ‘எனக்கு மக்கள் தான் முக்கியம். அவ்ர்களிடம் உரையாடிவிட்டு வந்ததால் தாமதமாகி விட்டது. காலதாமதத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நாளை வந்து வேட்புமனு தாக்கல் செய்வேன். ‘எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.