சமைக்கும் பொருட்கள் வீணாகிறதா? இதோ, உங்களுக்காக சில சமையலறை டிப்ஸ்!

Photo of author

By Gayathri

என்னதான் இப்போது இருக்கும் காலகட்டங்களில் மக்கள் தங்களின் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும், தாங்கள் வெளியே சாப்பிடுவதை விட வீட்டு சாப்பாட்டைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக காலையிலேயே அவசர அவசரமாக சமைத்து விட்டு தான் வெளியே போவதற்கு ரெடியாகிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் இருந்தாலும், அதைப் பாதுகாக்க சற்று சிரமப்படுகிறார்கள். வீட்டில் சமைக்கத் தேவைப்படும் பொருட்களைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

1)சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது அதில் தெரியாமல் தண்ணீரை அதிகமாக ஊற்றி விட்டீர்களா? இனி அதற்குக் கவலை வேண்டாம். அந்த மாவை குக்கரில் போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிளறிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும்போது மாவு சாஃப்ட் ஆகிவிடும். அது மட்டும் இல்லாமல், சப்பாத்தி அல்லது பூரியை உருட்டும் பதத்திற்கு மாவு எளிதாக வந்துவிடும்.

2)கறிவேப்பிலை, கொத்தமல்லியை சாதாரணமாக வெளியே வைத்தால் அழுகிவிடுகிறதா? இனி அதற்குக் கவலை தேவையில்லை. கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளைக் காட்டன் பைகளில் போட்டு வைத்து விட்டால் அது காய்ந்து போகாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

3)முட்டையை வேக வைத்த பின் ஓடுகளை எடுக்கும் போது முட்டையும் உடையக் கூடும். இதைத் தவிர்க்க, வேகவைத்த முட்டையைத் தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில் போட்டு, அதில் ஐஸ் கட்டிகளைப் போட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து உடைத்தால் முட்டை ஓட்டை ஈசியாகப் பிரித்து விடலாம்.

4)அரிசியில் வண்டு விழுந்தால் அதைக் கை வைக்காமல் சுத்தம் செய்ய, ஒரு சல்லடையில் அரிசியைப் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளலாம். இதனால் அதில் உள்ள வண்டு மற்றும் பிற தூசிகள் எல்லாம் தனித்தனியாக வந்துவிடும்.

5)பூரி சுடும் போது எண்ணெய் தெறிக்கும் என்று பயம் இருந்தால், ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பூரி சுடலாம். இதனால் எண்ணெய் தெறிக்கும் என்ற பயம் இருக்காது.