பொதுவாக அரசு வேலையில் ஓய்வு பெற்ற நபருக்கு ஓய்வுத்தொகை வழங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஓய்வு பெற்ற நபர் தங்கள் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிப்பது சற்று சிரமமாகவே இருந்து வந்தது. இப்போது அந்த கவலை வேண்டாம். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்கேற்ப ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தாமாகச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆன்லைன் செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ஓய்வூதியர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் புதிய செயல்முறை நவம்பர் 6, 2024 அன்று முதல் செயல்படுத்தப்பட்டது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை “பவிஷ்யா அல்லது இ – ஹெச்ஆர்எம்எஸ்” போர்ட்டல் மூலமாக “பார்ம் – 6ஏ” என்ற ஒரே படிவத்தைப் பயன்படுத்தி இதில் சமர்ப்பிக்க முடியும். ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், இபிஎஃப் கணக்கு விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை ஒரே படிவத்தில் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறை காகிதப்பணிகளின் வேலைகளைக் குறைப்பது மட்டுமின்றி, ஓய்வூதியத்தை வெளிக்கொண்டு வர எடுக்கும் அனைத்து நேரத்தையும் மேம்பட்ட முறையில் குறைக்க உதவுகின்றது. காரணம், பார்ம் – 6ஏ பயன்படுத்துவதால் ஓய்வூதியம் பெறுபவர் முழுமையாகவே டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க முடியும்.
இந்தச் செயல்முறை பல ஓய்வூதியதாரர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த ஆன்லைன் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்குச் சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். இதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிதி ரீதியான பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.