நூதனமாக உயர்த்தப்படும் ஆவின் பால் விலை ஆவின் பொருட்கள் தட்டுப்பாடு – ஓபிஎஸ் கண்டனம்

Photo of author

By Parthipan K

நூதனமாக உயர்த்தப்படும் ஆவின் பால் விலை ஆவின் பொருட்கள் தட்டுப்பாடு – ஓபிஎஸ் கண்டனம்

ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்வதற்காக ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் தற்போது ஆவின் பொருட்கள் விநியோகத்திலும் பல குளறுபடிகளை செய்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த திமுக அரசு,  தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆவின் பாலினுடைய உற்பத்தி விலையை குறைக்கும் வகையிலும், ஆவின் மொத்த விற்பனையாளருக்கான திருத்தப்பட்ட தரகினை ஈடுசெய்யும் வகையிலும், பச்சை வண்ண உறை கொண்ட பாலின் கொழுப்புச் சத்தினை 4.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைத்துள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரு லிட்டர் பால் விலை 40 பைசா உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும், இதனை சில்லறை விற்பளையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது மொத்த விற்பனையாளர்கள் லிட்டருக்கு மொத்தமாக ஒரு ரூபாய் உயர்த்துவார்கள் என்றும், சில்லறை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு மேலும் ஒரு ரூபாய் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வார்கள் என்றும், மொத்தத்தில் ஒரு லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு பொதுமக்கள் கூடுதலாக இரண்டு ரூபாய் செலுத்த நேரிடும் 

விலையேற்றம் ஒருபுறம் என்றால், மறுபுறம் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஆவின் பொருட்களான வெண்ணெய், நெய் போன்றவற்றின் உற்பத்தி குறைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மொத்தமாக வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும். அடுத்ததாக, நீல நிற பாக்கெட் பாலிலும் திமுக அரசு தன் கயரூபத்தைக் காட்டிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. எனவே நிதிநிலையைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.