ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை!
ஹரியானா மாநிலத்தில் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி உண்மைகளை வெளியிட்டார். இதையடுத்து 2002 ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையில் கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங்கும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ‘பூரா சச்’ என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் எர்கனவே தீர்ப்பு வெளியானது. அதில், ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார்.
ஆனால் இவருக்கான தண்டனை விவரம் இன்றுதான் அறிவிக்கப்பட்டது. அதில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ 31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் அந்த 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.