இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
94 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசேன், கிரீன் மூவரின் அரைசதத்தின் உதவியுடன் 312 ரன்களை அடித்து டிக்ளரும் செய்தது. இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக வைத்தது.
407 ரன் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 98 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. ரோஹித் ஷர்மா 52 ரன்களும் கில் 31 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரஹானே 4 ரன்களுடனும் புஜாரா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
5ஆவது நாள் ஆட்டத்தை புஜாராவும் ரஹானேவும் தொடங்கினர். ரஹானே 4 ரன்களுக்கு அவுட் ஆனார். பின் புஜாராவுடன் பன்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய பன்ட் 97 ரன்னில் அவுட் ஆகினார். பன்ட் அவுட் ஆகிய சிறிது நேரத்திலேயே புஜாராவும் அவுட் ஆகியதால் இந்திய அணி தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
ஆனால் அடுத்து வந்த விஹாரியும் அஸ்வினும் ஜோடி சேர்ந்து மேட்சை டிராவை நோக்கி கொண்டு சென்றனர். இருவரும் அபாரமான தடுப்பாட்டம் ஆடி ஆஸ்திரேலிய அணியை திக்குமுக்காட செய்தனர். இருவரும் கடைசிவரை களத்தில் நின்று தோல்வியின் விளிம்பில் இருந்த மேட்சை டிராவில் முடித்தனர்.