ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த வண்ணமே உள்ளது.அதே சமயம் இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகளும் வெளியானது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 7.47 லட்சம் பேருக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட உள்ளது. அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அசாம் சா பகிச்சா புரஸ்கர் மேலா என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவியானது வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 7.46 லட்சம் தேயிலை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலும் நேரடியாக ரூ. 3000 செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து தேயிலை தொழிலாளர்களுக்கும் ரூ. 5000 நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாஜக, அதன் ஒரு பகுதியாகவே இந்த நிதியுதவியையும் வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் எதிர்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 40 தொகுதிகளின் வெற்றியை தேயிலை தொழிலாளர்களே நிர்ணயிக்கின்றனர். எனவே அவர்களின் வாக்குவங்கியை கருத்தில் கொண்டு இந்த நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.