வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?

Photo of author

By CineDesk

இன்றுமார்கழி பெரிய அஷ்டமி 19/12/19 வியாழன் அன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம்.

சிவாயநம திருச்சிற்றம்பலம்

இன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.

மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ‘அஷ்டமி சப்பரம்’ என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..

ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள். இந்நிகழ்ச்சி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்தார் அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.

நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் . மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்

சிவாயநம திருச்சிற்றம்பலம்