இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!
அசுரன் மேடையில் குருவி படத்தின் 150 ஆவது நாள் விழா பற்றி தான் பேசியதற்கு நடிகர் பவன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுள் அசுரனும் ஒன்று. கிட்டதட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படும் இந்த படம் வெளியான போது தனுஷ் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் படத்தின் விளம்பரங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் அசுரன் படத்தின் 100 ஆவது நாள் விழா நடைபெற்றது. இதில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு மற்றும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பவன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் படத்தின் அருமை பெருமைகளைப் பேச நடிகர் பவன் மற்றும் ஆர்வ மிகுதியில் விஜய்யின் குருவி படத்தைக் கலாய்த்து விட்டார்.
பவன் பேச்சில் ‘ நான் இதற்கு முன்னதாக விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் 150 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த படத்தின் வெற்றியின் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது. ஆனால் அசுரன் உண்மையான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த விழா நடப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’ எனத் தெரிவித்தார். பவனின் பேச்சால் விழா மேடையில் அசௌகர்யமான சூழ்நிலை உருவானது.
இதையடுத்து பேசிய தனுஷ் பவனின் பேச்சை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என நாசூக்காக சொன்னார். ஆனாலும் இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. விஜய் ரசிகர்கள் பவனின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவன் ‘ நான் விஜய்யை சிறுமைப் படுத்துவதற்காக எதையும் சொல்லவில்லை. இதுபோன்ற விஷயங்களுக்காகதான் நான் விழா மேடைகளில் பேசுவதில்லை. ஆனால் அசுரன் விழாவில் என்னையும் அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்காக வருந்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.