டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த பயங்கர சம்பவத்தைப்போல, மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை புறநகர் அந்தேரியில் சகி நாகா என்ற பகுதி உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கூட்டாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி அவரது உடல் உறுப்புகளை காயப்படுத்தியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் நிர்பயா கொல்லப்பட்ட சுவடு இன்னும் ஆராத நிலையில் நாட்டில் பல பகுதிகளில் கூட்டு பாலியல் கொடுமைகள் அவ்வப்போது அரங்கேறி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறினர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறைகள் படிந்திருந்ததாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.