பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!!

Photo of author

By CineDesk

பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!!

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் ரோல் மாடல். அப்பா அம்மா இருவரையுமே குழந்தைகள் கூர்ந்து கவனிப்பார்கள். பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அல்லது என்ன பேசுகிறோமோ அதை குழந்தைகள் அப்படியே செய்வார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் நாம் தினமும் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள் நாம் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்ப கூடியவர்கள். நம்மை பார்த்து கற்றுக் கொள்வதால் நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள். அதனால் அவர்கள் மீது தப்பு சொல்லும் வார்த்தைகளையும், அவர்களை குற்றவாளியாக்கும் வார்தைகளையும் சொல்லக் கூடாது. அதாவது நீ ஒரு கெட்ட பையன்/பெண் போன்ற வார்த்தைகளை சொல்லக் கூடாது. அவர்கள் தப்பு செய்து இருந்தாலும், நீ நல்ல பையன்/பெண் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என பாசிட்டிவான வார்த்தைகளை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும் அதனால் யாரிடமும் குழந்தைகளை ஒப்பீடு செய்யாதீர்கள். இது குழந்தைகளின் மன நிலையை பாதிக்கும். இது குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் சுலபமாக மாறாது.

குழந்தைகளுக்கு நம்முடைய சூழ்நிலைகள் புரியாது. அதனால் ஏதாவது கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் அவர்கள் ஏதாவது கேட்கும் போதோ அல்லது சொல்லும்போதோ உடனே வேண்டாம், முடியாது என கூறாதீர்கள். இது போன்ற வார்த்தைகள் நம் மீது உள்ள நம்பிக்கையை குறைக்கும். நாம் எது கேட்டாலும் அம்மா/அப்பா நோ சொல்வார்கள் என குழந்தைகள் நினைப்பார்கள். அவர்கள் ஏதாவது கேட்டால், அது தேவையா இல்லையா என புரிய வையுங்கள்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். இது எல்லாம் செய்ய கூடாது. நான் அப்பவே சொன்னேன் உன்னால முடியாதுன்னு போன்ற வாரதைகளை கூறாதீர்கள். குழந்தைகள் புதிய முயற்சிகள் செய்யும் போது அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தோல்வியுற்றாலும் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என உற்சாக படுத்துங்கள்.

உங்கள் குழந்தைகள் செய்யும் செயல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது அவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டு உங்களிடம் சொல்ல வந்தாலோ, என்னோடு பேசாதே என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். இதனால் குழந்தைகள் மனம் சோர்ந்து போவார்கள்।  குழந்தைகள் சொல்ல வருவதை காது கொடுத்து கேளுங்கள், அவர்களின் மனதில் உள்ளவற்றை தயக்கமின்றி வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தவறாக பேசினாலும், அதை திருத்துங்கள்.

ஆண், பெண் பாகுபாடின்றி குழந்தைகளை வளர்த்துங்கள். ஆண் பிள்ளைகள் வீட்டு வேலை செய்யக் கூடாது, பெண் குழந்தைகள் வெளியில் செல்லக் கூடாது, பையன்களிடம் பேசக் கூடாது என பாலின ரீதியான வேறுபாடுகளை குழந்தைகளின் மனதில் ஊட்டாதீர்கள்.

பெற்றோர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என குழந்தைகளுக்கு தெரியாது. நீங்கள் கோபமாக, குழப்பத்தில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது, என்னை தனியாக விடு, நிம்மதியாக விடு போன்ற சொற்களை அவர்களிடம் சொல்லாதீர்கள்.  பெற்றோர்களுக்கு நம் மீது அன்பு இல்லை அதனால் தான் கோபப்படுகிறார்கள் என நினைத்து கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கக்காதீர்கள். அப்பா வரட்டும் அவர்கிட்ட சொல்றேன், உங்க மிஸ் கிட்ட சொல்றேன் பாரு போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அப்பாவின் மீதும், ஆசிரியரின் மீதும் பயத்தை உண்டாக்குகிறது. தவறு செய்தால் கூட தைரியமாக அப்பாவிடம் சொல் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள்.

ஒரு சில குழந்தைகள் மிகவும் சூட்டிகையாக இருப்பார்கள். பயங்கரமாக வால்தனம் செய்வார்கள். இது போன்ற குழந்தைகளிடம் அவர்கள் சேட்டை செய்யாமல் இருப்பதற்காக உன்னை மாதிரி இருக்கற பசங்களை யாருக்கும் பிடிக்காது, யாரும் உன்னை வச்சிக்க மாட்டாங்க போன்ற வார்த்தைகளை நாம் கூறுவோம். இது போன்ற வார்த்தைகள் குழந்தைகள் மனதில் நம்மை யாருக்கும் பிடிக்காது என நினைத்து மிகவும் சோர்ந்து போய் விடுவார்கள்.

இவ்வளவு பெரிய பையனா இருந்தும் இப்படி பன்றியே, ஆள்தான் வளர்ந்து இருக்கே, அறிவு இல்லை என்ற வார்த்தைகளை சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் நமக்கு குழந்தைகள் தான் நீங்கள் இது போன்ற வார்த்தைகள் கூறுவதால் அவர்களின் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு எல்லை கோட்டை வைத்து கொள்கிறார்கள். நான் பெரியவன் இப்படி செய்யக்கூடாது. என அவர்களுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்.