கடைசி ஓவர் வரை ஆஸி அணிக்கு பயம் காட்டி ரஷீத் கான்… போராடி ஆப்கன் தோல்வி!
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் 12 லீக்கில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பாக மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 54 ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு துணையாக மிட்செல் மார்ஷ் 45 ரன்களும், ஸ்டாய்னிஸ் 25 ரன்களும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 200 ரன்களை நோக்கி சென்ற ஆஸி அணியை ஆப்கன் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி 170 ரன்களுக்குள் சுருட்டினர்.
இதையடுத்து 169 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆப்கன் அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதி 4 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் ஆஸி அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆப்கன் அணியின் ரஷித் கான் ஆஸி பவுலர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டார். இதனால் கடைசி ஓவர் வரை பதட்டம் நிலவியது. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷீத் கான் 17 ரன்கள் வரை அந்த ஓவரில் அடித்தார். அதனால் கடைசி பந்து வரை பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆஸி அணி இந்த போட்டியை வென்றாலும், ரன்ரேட் மிகவும் கம்மியாக உள்ளதால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.