தென்காசி மாவட்டம் வீரகேளம்புதூர் பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த நிலப்பிரச்சினை சம்பந்தமான புகாரில் கடந்த மே 8 ஆம் தேதி காவல்நிலையம் சென்றபோது, விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மே 10 ஆம் தேதி அழைப்பின் பேரில் வீரகேளம்புதூர் காவல்நிலையத்திற்கு குமரேசன் சென்றுள்ளார்.
இந்நிலையில் குமரேசனை காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற காவலரும் கொடூரமாக தாக்கியுள்ளனர். வயிற்றுப்பகுதி, முதுகு பகுதியில் பூட்ஸ் கால்களோடு கோபத்தில் மிதித்துள்ளனர். இரண்டு கால்களையும் நீட்டச்சொல்லி பூட்ஸ் கால்களுடன் ஏறி உட்கார்ந்தும், முதுகில் லத்தியால் வெறியுடன் தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை யாரிடமும் சொல்லாத குமரேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் வேதனையுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து குமேரசனின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கல்லீரலும், கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமரேசனின் மரணத்திற்கு அப்பகுதி மக்கள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டு காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.