என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்தி வந்தாலும், இதுவரையில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடாக தெரியவில்லை.
எவ்வளவு பாதுகாப்பான சட்டத்தை இயற்றினாலும் பெண்களையும், குழந்தைகளையும், துன்புறுத்தம் அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலை கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போதெல்லாம் இந்திய நீதித்துறையின் மீது அவநம்பிக்கை மிகப்பெரிய அளவில் தலைதூக்கும் நிலையில்தான் தற்போது சாதாரண பொதுமக்களின் மனநிலை இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு போக்சோ வழக்கில் 10 வருட காலம் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி 8ம் வகுப்பு வரையில் படித்து இருந்தார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உறவினருக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தன்னுடைய அத்தைக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி அன்று பள்ளிப்படிப்பை தொடருமாறு சிறுமியை தன்னுடைய அத்தை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபித்துக் கொண்ட சிறுமி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.
புதுச்சேரி அண்ணா சாலையில் தனியாக நடந்து வந்த சிறுமியை விழுப்புரம் மாவட்டம் கூட்டுக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜசேகரன் தன்னுடைய ஆட்டோவில் கடத்தி அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் அந்த சிறுமியை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு ராஜசேகர் தப்பி சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஓதியன்சாலை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்கள். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகருக்கு 10 வருடகால கடுங்காவல் தண்டனையும், போக்சோ சட்டத்தில் ஐந்து வருடகால சிறை தண்டனையும் 12 ஆயிரம் அபராதமும், விதிக்கப்பட்டு இருக்கிறது. சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்கவும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலச் சிறைத்தண்டனையும், விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், புதுவை அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.