என்ன ஜல்லிக்கட்டு நடத்த கூடாதா? மீண்டும் தலை தூக்கும் பீட்டா அமைப்பு என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

0
118

கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் நோய்த்தொற்று உலக நாடுகளில் மிக வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று தடம் பதித்து இருக்கிறது. கோவிட் பாதிப்பை விடவும் இந்த புதிய வகை நோய் தொற்று அதி வேகமாக பரவக்கூடிய கிருமி என்ற காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

ஆகவே புதிய நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புத்தாண்டு அன்று நள்ளிரவு சென்னை மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

தற்சமயம் புதிய வகை நோய் தொற்று அச்சுறுத்தல் இருக்கிறது கொடிய வைரஸ் தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் வழங்கக்கூடாது.

ஆகவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துக்களுக்கு செவி சாய்த்து பொதுமக்களை ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கவும், காளைகளை கொடுமைகளிலிருந்து பாதுகாக்கவும், ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது அந்த அமைப்பு.

நோய்தொற்று உருமாற்றம் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு 80 மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு இருக்கின்ற மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் தீபிகா தெரிவிக்கும்போது பொதுமக்கள் அதிகமாக கூடும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலமாக புதிய வகை நோய் தொற்று உள்ளிட்டவற்றை தடுக்க முடியும், பொது சுகாதாரத்தை பேணி காக்க இயலும். மருத்துவர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.