தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது திமுக அரசானது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்து விட்டது என்றும் அதிலும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டரின் விலை உயர்த்துவது போன்ற இன்னும் சில அரசியல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது ஆனால் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் செயல் தலைவர் தெரிவித்திருப்பதாவது :-
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாய் என ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்பு பல்வேறு காலகட்டத்தில் விலைவாசிகள் உயர்ந்த பின்பும் ஆட்டோ கட்டணமானது உயர்த்தப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், 2022 ஆம் ஆண்டு விலைவாசி ஏற்றத்தின் காரணமாக நீதிமன்றம் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 1.5 கிலோமீட்டருக்கு 50 ரூபாய் என்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் என்ற கணக்கில் வசூல் செய்யப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டங்களை திமுக அரசு கவனிக்க மறுத்துவிட்டது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீட்டர் கட்டணத்தை உயர்த்துவோம் என கூறியிருந்ததை இன்று வரை நிறைவேற்றவில்லை என்றும் புதிய ஆட்டோக்களை வாங்குபவர்களுக்கு பத்தாயிரம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்ததையும் மேற்கொள்ளவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கிறார்.
முறைகேடான முறையில் 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கு 78 ரூபாய் வசூலிக்க கூடிய நிறுவனங்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் மார்ச் 19ஆம் தேதி அன்று இந்தப் போராட்டத்தில் 60 சதவிகித ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொள்ள இருப்பது அன்று ஆட்டோவில் பயணிக்க கூடியவர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.