நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!

0
101

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த ஏழாம் தேதி பதவியேற்றதிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்கட்டமாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் போன்ற பல அறிவிப்புகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அறிவித்திருந்தார். அதன்படி பதவியேற்ற அன்றே ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் அடக்கம் அதன்படி நாளை முதல் இந்த ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வர இருக்கிறது.

ஸ்டாலின் தொடர்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உயிருடன் இருந்த சமயத்தில் அவர் திமுகவின் பொருளாளராக செயல்பட்ட சமயத்திலும், உள்ளாட்சித்துறை அமைச்சராக செயல்பட்ட சமயத்திலும் பெரிய அளவில் பொது மக்களிடம் நற்பெயர் வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு அவர் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றினார்.

ஆனால் அவர் துணை முதல்வராக இருந்த சமயத்தில்தான் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார் அவ்வாறு அவர் கையெழுத்திட்ட விளைவு பிற்காலத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஆக மாறியது. ஆனால் அந்த சமயத்தில் ஸ்டாலினிடம் அது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அப்பொழுது தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் என்பது போன்ற அலட்சியமான பதிலை அவர் தெரிவித்தார். அதனால் மக்கள் அவர்மீது மிகப்பெரிய கோபத்தில் இருந்து வந்தார்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து தற்சமயம் முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.ஆகவே பொதுமக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக ஸ்டாலின் இருந்து வருவதாக சொல்கிறார்கள். அதன் காரணமாகவே பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், ஸ்டாலின் அறிவித்தபடி நாளை முதல் ஆவின் பால் விற்பனையில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சமன் படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 43 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சமன் படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 23 ரூபாய் 50 பைசாவில் இருந்து 22 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் 25 ரூபாய் 50 பைசாவில் இருந்து 24 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூபாய் 20 இல் இருந்து 18 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டிருக்கிறது. ரீமேட் ஒரு லிட்டர் பால் விலை 60 லிருந்து 57 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல ஒன்றாம் தேதிமுதல் 15ம் தேதிவரை கொடுக்கப்படும் பால் அட்டை 16ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரையில் கொடுக்கப்படும் எனவும், அதற்கான வித்தியாசத் தொகையை அடுத்த மாத பால் அட்டை விற்பனையின் போது ஈடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பால் விநியோகம் தங்குதடையில்லாமல் நடைபெறுவதை கண்காணிப்பதற்காக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.