“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!
பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய அணிக்கு எதிரான தோல்வி. ஆனால் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக 130 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றது, அந்த அணி மீது கடுமையான விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்விப் பற்றி பேசியுள்ளார். அதில் “நாங்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. நாங்கள் சுழல்பந்து வீச்சு செட் ஆகாது என நினைத்தோம். ஆனால் ஜிம்பாப்வே அணியின் சுழல்பந்து வீச்சு நன்றாக வேலை செய்தது. நாங்கள் கூடுதலாக ஒரு சுழல்பந்து வீச்சாளரோடு களமிறங்கி் இருக்க வேண்டும்.
எங்கள் அணியின் ஷதாப் கான் அவுட் ஆனதும், அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி தோல்வியால் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.