பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

Photo of author

By Parthipan K

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார், தனது பசுமாடுகளை வீட்டுப் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார் மனிதர்களுக்கு எப்படி பெயர் இருக்கிறதோ அதுபோன்று தனது 4 பசுமாடுகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ஐஸ்வர்யா என்ற பசுவை அவரது குடும்பத்தினர் செல்லமாக வளர்த்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா என்னும் பசு தற்போது 9மாத சினையாக உள்ளது.

பெண்களுக்கு எப்படி வளைகாப்பு நடக்குமோ அதுபோல தனது பசு ஐஸ்வர்யாவுக்கும் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக தனது கிராமத்தில் இருக்கும் மக்களை அழைத்து வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி கிராம மக்களை அசத்தியிருக்கிறார்.கிராம மக்கள் அனைவரும் விழாவில் கலந்துக் கொண்டு ஐஸ்வர்யா பசுவின் நெற்றியில், கன்னத்தில், சந்தனம் ,குங்குமம் ,பூசி இரண்டு கொம்புகளிலும் வளையல்களை அணிவித்தனர், இதைத்தொடர்ந்து வளைகாப்பு சாப்பாடும் போடப்பட்டது.

இதைப்பற்றி அண்ணாமலையிடம் பேசியபோது எங்களுக்கு மாடுகள் மேல் உயிர் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் நடந்தால் நாங்கள் பசு மாடு அல்லது கன்றுக்குட்டியை வாங்கி வந்து விடுவோம். எங்களுடைய கல்யாணத்தில் கூட ஒரு கன்றுக்குட்டியை வாங்கினோம்  10 வருடம் ஆயிற்று அது பெரிய பசுமாடாகி முதலில் 4 காளைக் கன்றுகளை ஈன்றது ரொம்ப வருடமாக பசுங்கன்று போடும்னு காத்திருந்தோம் ஆனால் ஐந்தாவதாக தான் ஒரு பசுங்கன்று ஈன்றது.

ஐந்தாவதாக போடப்பட்ட அந்த பசுங்கன்று தான் ஐஸ்வர்யா அதை எங்கள் வீட்டில் உள்ள பெண் பிள்ளையாகத்தான் வளர்த்து வருகிறோம். வீட்டில் இருக்கும் எல்லா பசுவும் எங்க வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் கூட ஐஸ்வர்யாவுக்கு கூடுதல் செல்லம் கொடுத்தோம். அதனாலயோ என்னவோ என் பொண்ணுக்கு மாதிரி எல்லா சடங்குகளையும் ஐஸ்வர்யாவுக்கு செய்யனும்னு தோணுச்சு இப்பொழுது ஐஸ்வர்யா பசு 9 மாத சினையாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் இதுமாதிரி பசுமாட்டுக்கு எல்லா சடங்குகளையும் செய்திருக்கிறார்கள். இனி நாங்களும் எல்லா பசுக்களுக்கும் சடங்குகளைச் செய்வோம் என்றார் அண்ணாமலை.