24 மணிநேரம் கெடு! நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட தனுஷ்! 

Photo of author

By Rupa

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். ரசிகர்களின் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு அனுப்பிய லீகல் நோட்டீஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய செய்தியில், ” ‘நானும் ரவுடிதான்’ படம் தனுஷ் தயாரித்தது. படத்தின் அனைத்துக் காட்சிகளும், குறிப்பாக பிடிஎஸ் காட்சிகள் தனுஷுக்குச் சொந்தமானது. ஆனால், இந்த பிடிஎஸ் காட்சிகளை தனுஷ் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதை மீறி நயன்தாரா தனது நெட்பிலிக்ஸ் டாக்குமென்டரியில் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சியை அவர் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும், இல்லையென்றால் அவரிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும்” என்று வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து, நெட்பிலிக்ஸ் இல் உள்ள பிடிஎஸ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நயன்தாரா தனுஷுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “உங்கள் தந்தை மற்றும் சகோதரரின் ஆசியுடன் புகழ் பெற்ற நடிகராக வளர்ந்து வந்துள்ளீர்கள். ஆனால், ஒரு தனிநபராக எந்த ஒரு துணையும் இல்லாமல் சினிமாவில் இந்த இடத்தை பிடித்துள்ளேன். இது எனக்கு சாதாரணமாகக் கிடைக்கவில்லை.

நான் வெளியிட இருக்கும் இந்த நெட்பிலிக்ஸ் டாக்குமென்டரி ரிலீஸ் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது என்னைப் பற்றியும், நான் கடந்து வந்த பாதை பற்றியும், என் திருமணத்தைப் பற்றியும், என்னுடன் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் பற்றியும் பேசக்கூடிய ஆவணப்படம். என் கரியரில் முக்கியமான படமாகக் கருதக்கூடிய நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்புகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறேன். இதற்காக 2 வருடங்களாக உங்களிடம் என்ஓசி வாங்க முடியாமல் திணறிக்கொண்டு உள்ளேன்.

ஒரு 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்பது நியாயமா? இந்தச் செயல் எங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் மீது உங்களுக்கு உள்ள வன்மத்தின் காரணமாகவே இப்படிச் செய்துள்ளீர்கள். உங்கள் அடுத்த ஆடியோ லாஞ்சில் பல கட்டுக்கதைகளைக் கூறுவீர்கள் என்பது தெரியும். என்னதான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சினிமாவிற்கு வெளியே இப்படி வன்மத்தோடு இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.