“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல்
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான், பாஜகவையும் போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார். இருப்பினும் பல காலமாக சீமான் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதாவது, சீமானின் கட்சி பாஜகவுக்கு மறைமுகமாக வேலை செய்கிறது என்றும், பாஜகவின் பி டீம் என்றும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதற்கு அவ்வப்போது விளக்கமும் கொடுத்திருந்தார் சீமான். “நான் ஏ டீமும் இல்லை. பி டீமும் இல்லை. புதிதாக சி டீமில் இருக்கிறேன்” என்று கிண்டலாக பதில் அளித்திருந்தார். என்னதான் அவர் விளக்கம் அளித்தாலும், பாஜகவில் இருந்து நிச்சயம் அழைப்பு வந்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். ஏனெனில் அண்மை நாட்களாக மாற்று கட்சி பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தன்னுடைய கட்சியைகூட பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இந்தநிலையில் பாஜகவுடன் சேர்ந்திருந்தால் தனக்கு என்ன கிடைத்திருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் சீமான். தேர்தல் பரப்புரையின்போது பேசிய அவர், “பாஜகவினர் என்னிடம் எத்தனையோ ஆசைவார்த்தைகள் கூறினர். அங்கு போயிருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும். 10 சீட்டுகள் கிடைத்திருக்கும்” என தெரிவித்தார்.
_3a :880