இந்த மலையில் இனிமேல் இதற்கு தடை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தினால் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் வருகின்ற மே மாதம் வரை 3 மாதங்களுக்கு கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளாக உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர், தேனி, கொல்லிமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன.
அதற்கென தனி குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மலையேறும் பயிற்சிக்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வனச்சரகர் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற்று மலையேற்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மழையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் காட்டுத்தீயில் சிக்கினார்கள். இச்சம்பவத்தை அடுத்து கோடை காலங்களில் மழையேற்ற பயிற்சிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை.
தற்போது கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடை காலம் முடியும் வரை மலையற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நாமக்கல் வனசரகர் பெருமாள் கூறியதாவது,
கொல்லிமலையில் காரவள்ளி ஏணிக்கல் தடம், புளியங்சோலை, எருமப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி அடுத்த பழனியப்பர் கோவில் ஆகிய பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில், காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 3 மாதத்துக்கு மலையேறும் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மலைப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.